செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

*பயங்கரப் புயல்!* நீர் சூழ்ந்த சிறு தீவு ஒன்றில் தம் செல்வங்களை சொந்தம் கொள்ளத் துடிக்கும் மனிதர்களின் பேராசைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க இயற்கையின் வலிய கரம் நெருங்கிக் கொண்டிருந்தது..... நிலவொளியில் கடற்கரை காட்சிகள் ரம்யமாக இருக்கின்றன! புயல் கடந்த அமைதியில் ஒலிக்கும் பார்னேயின் குரல் நிதர்சனத்தை படம் பிடிக்கிறது! " இயற்கையின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அற்ப மனங்களில் தான் எத்தனை ஆசைகள்! " கதையின் கடைசி சித்திரமானது, நம் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் விடை கொடுத்து அனுப்பும் போது நம் மனதில் படியும் பிரிவின் பாரத்தை ஏற்றுகிறது....


பிரபஞ்சத்தின் புதல்வன்! நம் சிறு வயதில் நாம் அனுபவித்து கடந்து வந்த சாகஸங்கள் நிறைந்த மாய உலகத்தை நம் செல்வங்களுக்கு அறிமுகப்படுத்த தமிழுக்கு "தோர்கள்" ஒரு நல்ல வரவு! நம்மிடமே இருக்கும் இது போன்ற கதைகளை தோர்கள் போல அழகு சித்திரங்களுடன் உயிரூட்டினால் தமிழ் சமூகத்துக்கு ஒரு பெரும் சிறுவர் கதைக்குவியல் கிடைக்கும்!


திங்கள், 10 பிப்ரவரி, 2014

* யுத்தம் உண்டு! எதிரி இல்லை! * ஒரு முன் எச்சரிக்கை! இப்பதிவில் கதையின் சஸ்பென்ஸ் உடைந்து போகும் அபாயமிருப்பதால் கதையை படித்த பின் இப்பதிவை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! பழம் அமெரிக்காவின் எல்லையற்ற சமவெளிப் பிரதேசங்களில் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வந்த பூர்வகுடிகள், குடியேற்ற பிரஜைகளின் வரவின் மூலமும், எளியவனை வலியவன் அழிக்கும் பூமியின் நியதியின் காரணமாகவும், தம் வசிப்பிட சுதந்திரங்களை இழந்து ஒப்பந்தங்களால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிகாரி ஒருவரின் துரோகத்தால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் செல்வது தடைபடவே தம் பெண்டு பிள்ளைகளின் பட்டினியை பொறுக்க மாட்டாமல், அருகாமை பண்ணைகளை தாக்கி கொள்ளையடிக்கும் அவல நிலைக்கு அப்பெரும் வீரர்கள் ஆளாகின்றனர்! மேலோட்டமாக சுமாரான கதையாக தோன்றினாலும், அதிகாரிகளின் சுயநலமும், பொறுப்பின்மையும், இரு பக்க எளிய மக்களின் இயல்பு வாழ்வை பெரிதும் பாதிப்பதை இக்கதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.....


காவியில் ஒரு ஆவி! ஜில் ஜோர்டானின் முந்தைய சாகஸமான "அலைகடல் ஆலிங்கனம்" மர்மம் நிறைந்த ஒரு புதினமாக இருந்ததால் இக்கதையை படிக்க மிக ஆவலுடன் இருந்தேன்! ஆனால் பதின்ம வயது சிறுவர்களுக்கானஒரு எளிய கதையாகவே என்னால் இதை உணர முடிகிறது.! மேயர் பேசும்போது வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு குழப்பமாக பேசுவதும். ஜலதோஷம் பிடித்த உதவியாளர்களின் முதல் எழுத்து தடுமாற்றமும் ரசிக்க வைத்தன! 10ம் பக்கத்தில் விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் மேயர், 18ம் பக்கத்தில் பத்திரிகை நிருபர்களை அழைக்கட்டுமா? எனும் போதே அவரது நோக்கம் தெளிவாகி விடுகிறது! 15ம் பக்கத்தில் பிசாசு தண்ணீரில் தடுக்கி விழுவதும், 19ம் பக்கத்தில் மேயரின் உதவியாளருக்கு ஜலதோஷம் பிடிப்பதும், வெள்ளைப்பிசாசு யார்? என்பதை தெளிவு படுத்தி விடுகிறது. இதன்பின் தொடரும் கதையானது ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளை கிளறிவிட்டு சுவாரஸ்யமின்றி சப்பென முடிந்து விடுகிறது! பச்சைக்கலரில் எதைக்கண்டாலும் ஸ்வாஹா பண்ணும் அந்த பசுமாடாவது ஏதேனும் முக்கியமான ஆவணங்களை விழுங்கி கதையை சுவாரஸ்யப்படுத்தும் என எதிர்பார்த்தால், அது வெறும் காமெடி பீஸு !!! ஜில்! ஏமாத்திட்டீங்க சார்!


ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

காலத்தின் கால் சுவடுகளில்... பரந்து விரிந்த கானகங்களும் மணற்பரப்புகளும் காட்டாறுகளும் நிறைந்த இப்பூமியில், சாகஸ பயணம் மேற்கொள்ளும் தருணங்கள் யாவருக்கும் வாய்த்திடுவதில்லை! இலக்கு ஒன்றை நோக்கி பயணிக்கும் சிறு குழுவுடன் துவங்கும் கதையானது இயற்கையின் அழகுகளை வாசகனுக்கு அழகிய தெளிவான சித்திரங்களுடன் விருந்தளித்தவாறு அடர்ந்த கானகத்தினுள் அழைத்துச் செல்கிறது. கானகங்கள் தம் வசீகர முகத்தின் பின்னாக மறைத்து வைத்திருக்கும் அபாயங்களை அடுத்தடுத்து சந்தித்தவாறு இலக்கை அடையும் குழுவின் கண்முன்னாக விரிகிறது புராதன நகரொன்றின் எழிற்கோலம்! என்றோ மறைந்து போனதொரு சாம்ராஜ்யத்தின் எச்சங்களாய் நிற்கும் அந்த இடிபாடுகளிடையே பொக்கிஷம் தேடும் வெறியர்களுக்கும் அவற்றை கட்டிக் காக்கும் பழங்குடியின் இறுதிப் போராட்டத்துக்கும் இடையிலாக வந்து சேரும் சாகஸ குழுவும் அக்கண்ணாமூச்சி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கியது!..... அழுத்தமான கதை என்ற ஒன்று இல்லாதது மட்டுமே குறை.!


வெள்ளி, 19 ஜூலை, 2013

*டைலன் டாக்* ஜானி எனும் காது கேட்காத வாய் பேச முடியாத இரண்டு வயது சிறுவன் காணாமல் போகிறான். பல ஆண்டுகள் கழித்து அவன் வெளிப்பட்ட போது அவனுடைய கால்கள் இரண்டும் கிட்னி ஒன்றும் நுரையீரல் ஒன்றும் நீக்கப்பட்டிருந்தன. அவனுக்கு இந்த கொடுமைகளை இழைத்தது யார்? எனும் கேள்வியுடன் துவங்கும் இந்தக் கதை தொடரும் பக்கங்களில் மெல்லிய உணர்வுகளின் பிரவாகமாய் நகருகிறது. ஜானியின் புலன்கள் மெல்ல மெல்ல விழித்துக் கொள்ளும் இடங்களில் நம்முள்ளும் ஒரு பரவசம் மலர்கிறது! ஜானியை சூழ்ந்துள்ள மர்மங்கள் விலகும் போது இப்படியும் நடக்குமா? எனும் திகைப்பு ஏற்படுகிறது. கதையின் முடிவு தமிழ் சினிமா முடிவைப் போல் இருக்கிறது. கதை முடிந்த பின்னும் ஒரு கேள்வி எழகிறது. தனக்கு தீங்கிழைத்தது யார் எனும் உண்மை தெரிந்திருந்தும் ஜானி மவுனம் சாதிப்பது ஏன்? பயமா? பாசமா? ஜானியின் இறுதி ஆசை அது "பாசம்" என்பதாகவே என்னை உணரச் செய்கிறது. இயல்பான வசன நடை கொண்ட இக்கதை நான் படித்தவற்றில் மிகச்சிறந்தது என்பேன்! இக்கதையை படித்த பின் உங்களுக்குள்ளும் ஒரு குரல் ஒலிக்கக் கூடும் ஜானி... ஜானி... ஜானி... https://m.facebook.com/photo.php?fbid=145036109029824&id=100005703062523&set=gm.205985269557121&refid=18